×

தேர்தலில் வாக்களிப்பதற்காக 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தேர்தலில் வாக்களிப்பதற்காக, அரசு பேருந்துகள் வாயிலாக கடந்த 2 நாட்களில் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு சிறப்பு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் இருந்து 2,899 பேருந்துகளின் வாயிலாக சுமார் 1,48,800 பயணிகள் பயணித்தனர். மேலும் 2 நாட்களில் 46,503 பயணிகள் சென்னையிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள், பெண்கள் என பெரும்பாலானோர் கடந்த வார இறுதியிலேயே சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். நேற்றைய தினம் அலுவலக பணியாளர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஏற்கனவே 2,970 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது. இவை தவிர பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 83,000 பேர் பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து 6 மணிக்கு மேல் பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கினர். பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவருக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டதை பணியாளர்கள் உறுதி செய்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 4 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் வாசிகளில் பலர், ஒரே நாள் விடுமுறையில் சொந்த ஊர் சென்று திரும்ப வேண்டி அவசரமாக விமானங்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் நேற்று பயணிகளின் கூட்டம் அதிகரித்தடது. இதனால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்தன. சென்னை – தூத்துக்குடி வழக்கமான விமான கட்டணம் ரூ.3,957 நேற்று ரூ.8,297 முதல் ரூ.12,716 வரை.

சென்னை – மதுரை கட்டணம் வழக்கமாக ரூ.3,674 நேற்று ரூ.8,555 முதல் ரூ.11,531 வரை. சென்னை – திருச்சி கட்டணம் வழக்கமாக ரூ.2,382 நேற்று ரூ.6,344 முதல் ரூ.8,507 வரை. சென்னை – கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,342 நேற்று ரூ.7,881 முதல் ரூ.8,616 வரை. சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,433 நேற்று ரூ.5,572. தங்களுடைய சொந்த ஊர் சென்று வாக்குகளை பதிவு செய்யும் ஆர்வத்தில், விமான கட்டணங்கள் பற்றி கருத்தில் கொள்ளாமல் ஆர்வமுடன் பலர் முன்பதிவு செய்து பயணித்தனர்.

* பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலை போக்குவரத்து தடமான சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் பல கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு வரிசை கட்டி நின்றதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானனோர் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்ததால் பேருந்து நிலையங்களில் திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது. இதேபோல், சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வழக்கமாக ஆறு பூத்கள் வழியாக சென்ற நிலையில், வாகன நெரிசலை தவிர்க்க நேற்று கூடுதலாக ஒரு பூத் திறக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீராக இயங்கியது.

The post தேர்தலில் வாக்களிப்பதற்காக 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...