×

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா? அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்: வருமானவரி துறை தீவிர விசாரணை

சென்னை: அதிமுக பிரமுகர் லிங்கராஜ் என்பவர் வீடு மற்றும் அவரது நிறுவனத்தில் நடந்த சோதனையில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத ரூ.2.85 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம், வருமான வரித்துறை தேர்தல் பணம் பட்டுவாடா தொடர்பாக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென் சென்னை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான லிங்கராஜ் என்பவர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான குரோம்பேட்டை-துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள அலுவலகம், கோவிலம்பாக்கத்தில் உள்ள சிமென்ட் கான்கிரீட் கலவை கம்பெனி மற்றும் ஜல்லி, மணல் விற்பனை அலுவலகம் என 5 இடங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அதிமுக பிரமுகரான தொழிலதிபர் லிங்கராஜ் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1.85 கோடி பணமும், அவரது நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடி என மொத்தம் கணக்கில் வராத ரூ.2.85 கோடி ரொக்கம் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான வரவு குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொழிலதிபர் லிங்கராஜூடம் கேட்டனர். அதற்கு அவரிடம் முறையான கணக்குகள் இல்லாதால் ரூ.2.85 கோடி ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது, சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து பணம் வரவு குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் பணம் குறித்த தகவல்கள் முழுமையாக தெரியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கலா? அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்: வருமானவரி துறை தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,Lingaraj ,Tamil Nadu ,Income Tax ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக...