×

அதே முகவரியில் தொடர்ந்து வசித்தபோதும் பல ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: மீண்டும் சேர்க்க முடியாததால் தவிப்பு, தேர்தல் நடைபெறும் நிலையில் அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் 39 தொகுதி, புதுச்சேரியில் ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பூத் சிலிப்புகள் வழங்கும் பணிகள் ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் சில பகுதிகளில் பலருக்கு பூத் சிலிப் வரவில்லை. உதாரணமாக, ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் சிலருக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வரவில்லை.

அதன்பிறகே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதது அவர்களுக்கு தெரிந்தது. சிலர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோதே பெயரை சரிபார்த்தனர். அப்போது பெயர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவர்களில் சிலர் உடனடியாக ஆன்லைனிலும் விண்ணப்பம் செய்தனர். நேரிலும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். ஆனால், 40 மற்றும் 50 வயதை கடந்தவர்களுக்கு பெயர் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இவர்களது விண்ணப்பத்தை சரிபார்த்த வாக்குச்சாவடி அலுவலர்கள், 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே புதிதாக பெயர் சேர்க்க உடனே அனுமதி வழங்க முடியும் எனவும், மற்றவர்களுக்கு முகவரி மாற்றத்தின் அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். ஆனால், பெயர் நீக்கப்பட்டு விட்டதால் முகவரி மாற்றம் அல்லது திருத்தம் செய்ய இயலவில்லை.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வந்து சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலானோர் வீடு வீடாக வருவது கிடையாது. நேரில் வராமலே குத்து மதிப்பாக பெயர்களை நீக்கி விடுவதால், முகவரி மாறாமல் இருந்தும் பெயர்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 7 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டியலில் நீக்கப்பட்டு விட்டதால் வாக்காளர் எண்ணிக்கை குறைந்து விட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் செய்த தவறால் இவர்களில் எத்தனை பேர் முகவரியில் வசித்தும் பட்டியலில் நீக்கப்பட்டனர் என்பது மர்மமாக உள்ளது. இந்த குளறுபடிக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* காரணம் என்ன?
1990களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 34 ஆண்டுகளாக அதே பட்டியலே தொடர்ந்து திருத்தப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் சொந்த வீடு உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் ஒரே வீட்டில் வசிப்பதில்லை. அதே தொகுதி அல்லது வேறு தொகுதியோ முகவரி மாறி விடுவர்.

இதனால் பழைய பட்டியலில் திருத்தம் செய்வது சவாலானது. பெயர் இருந்தும் நீக்கப்படுவது ஒருபுறம் இருக்க, சிலரது பெயர் ஒரே தெருவில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தும் நீக்கப்படுவதில்லை. இதை தவிர்க்க புதிய பட்டியல் தயாரிப்பதும், ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பதும் அவசியம்.

The post அதே முகவரியில் தொடர்ந்து வசித்தபோதும் பல ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: மீண்டும் சேர்க்க முடியாததால் தவிப்பு, தேர்தல் நடைபெறும் நிலையில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Lok Sabha ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்...