×

சாதாரண தேர்தல் இல்லை அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்: தொண்டர்களுக்கு ராகுல் வீடியோ செய்தி

புதுடெல்லி: நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் என்பதால் உங்களுக்கு அதிக பொறுப்புள்ளது என்று தனது கட்சி தொண்டர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது கட்சியின் தொண்டர்களுக்கு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த வீடியோ செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேசியுள்ள ராகுல் காந்தி, ‘‘நீங்கள் தான் நமது கட்சியின் முதுகெலும்பு. தேர்தல் நேரம் என்பதால் உங்களிடம் நேரடியாக பேசவேண்டும் என்று விரும்பினேன். இது சாதாரண தேர்தல் கிடையாது. இது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல். சிங்கம் போன்ற இதயம் கொண்ட உங்களை போன்ற தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சிந்தனை மற்றும் கொள்கைகள் உங்களுக்குள் பதிந்திருப்பதால் அது உங்கள் உணர்வுகளில் உள்ளது.

பாஜ-ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் கொள்கைக்கு எதிரானவை. அவர்கள் நமது அரசியலமைப்பை தாக்குகிறார்கள். நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு, தேர்தல் ஆணையம் உட்பட நமது நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பை தாக்குகிறார்கள். அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக நீங்கள் தான் தெருக்களிலும், கிராமங்களிலும், அனைத்து இடங்களிலும் போராடுகிறீர்கள். நீங்கள் தான் பாதுகாவலர்கள். பாஜ மற்றும் அதன் கொள்கைகளை காங்கிரஸ் தோற்கடிக்கப்போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சாதாரண தேர்தல் இல்லை அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்: தொண்டர்களுக்கு ராகுல் வீடியோ செய்தி appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Congress ,president ,Rahul Gandhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு