×

அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன் அனுமதி தேவையில்லை: கலெக்டரின் உத்தரவு ரத்து, ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன் அனுமதி பெற வேண்டுமென்ற கலெக்டரின் உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரையைச் சேர்ந்த ரஞ்சித்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழா கடந்த 12ம் துவங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது, முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பாரம்பரிய முறைப்படி தோல்பையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தவிட்டுள்ளார்.

இதுவரை 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள், விழா நாளன்று இரவு அல்லது அதிகாலையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் என ஏறக்குறைய பத்தாயிரம் பேர் கலந்து கொள்வர். அவர்களுக்கு இதுபோன்ற நடைமுறைகள் சாத்தியமில்லாதது. பாரம்பரிய விழாவில் இதுபோன்ற புதிய முறை பின்பற்றுவது சிரமமானது. கோடையில் விழா நடைபெறுவதால், அதன் வெக்கையை தணிக்கவே தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

எனவே கலெக்டரின் உத்தரவை தடை செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அதிக திறன் கொண்ட பிரஷர் பம்புகள் இல்லாமல் பாரம்பரிய முறையில் தோல்பை விசை மூலம் மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்.

குழந்தைகள், பெண்கள் மீது சிலர் வேண்டுமென்றே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை தடுக்க வேண்டும். எந்தவொரு ஆலோசனை, வழிமுறைகளின்றி உத்தரவு உள்ளது. எனவே முன் அனுமதி பெற வேண்டுமென்ற கலெக்டரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மதுரை கலெக்டர் உரிய உத்தரவு பிறப்பித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

* ‘அறங்காவலர் குழுத்தலைவரே செங்கோலை பெற்றுக் கொள்ளலாம்’

மதுரையைச் சேர்ந்த தினகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் மீனாட்சி அம்மன் கோயில் விழாவின் 8ம் நாளான பட்டாபிஷேகம் நிகழ்வு இன்று நடக்கிறது. இதில் மீனாட்சி அம்மனிடம் செங்கோல் வழங்கும் வைபவம் நடைபெறும். இச்செங்கோலை உரிய அறங்காவலர் குழுத்தலைவர் பெற்றுக்கொள்வார். ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது.

தற்போதைய அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது. வேறு நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என ஏற்கனவே மனு செய்திருந்தேன். எனது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்து தகுதியான வேறு நபரிடம் செங்கோலை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘இதுதொடர்பான வழக்கில் தனி நீதிபதி ஏற்கனவே தெளிவாக உத்தரவிட்டுள்ளார். அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இதுகுறித்து ஆகமவிதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதா? பல நூறு ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் விழாவில் தனிப்பட்ட ஒரு நூலை மட்டும் வைத்து எதையும் கூறிவிட முடியாது.

போதுமான அளவில் நம்பகமான, சாத்தியமான சான்றுகள் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும். இனிவரும் காலங்களில் நிபுணர் கமிட்டி ஏற்படுத்தப்பட்டு அக்குழுவின் ஆலோசனையில் விழா நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தினர், வரும் ஜூன் மூன்றாம் வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போதைய பட்டாபிஷேகம் விழாவின் ஏற்பாடுகள் தொடரலாம். செங்கோலை சம்பந்தப்பட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பெற்றுக்கொள்ளலாம்’’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன் அனுமதி தேவையில்லை: கலெக்டரின் உத்தரவு ரத்து, ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Aycourt ,Madurai ,Eicourt branch ,Ranjit Kumar ,Icourt Madurai ,Madurai Chitra Festival ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை...