×

7 இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது தமிழ்நாட்டில் 3 நாள் வெப்ப அலை வீசும்

சென்னை: தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவுவதாலும், வெப்பம் அதிகரித்து வருவதாலும் 7 இடங்களில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, 3 நாட்களுக்கு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. காலை 11 மணிக்கு மேல் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.

இந்நிலையில், 18, 19ம் தேதிகளில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை மிக அதிகமாக இருந்தது. கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருந்தது.

அதிகபட்சமாக வேலூரில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. தர்மபுரி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 106 டிகிரியாக இருந்தது. இது தவிர நாமக்கல், திருப்பத்தூர், திருத்தணி, பகுதிகளில் 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் 102 டிகிரியாக இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

நேற்று மாலையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 22ம் தேதி வரை நீடிக்கும். வெப்பநிலையை பொறுத்தவரையில் படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்றைய தினம் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மேலும், வட தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 102 டிகிரி முதல் 108 டிகிரி வரையும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் சராசரியாக 100 டிகிரி வரை இருக்கும். இதே நிலை 22ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் அந்த நாட்களில் வெப்ப அலை வீசும்.

வட ஆந்திர கடலோப்பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

The post 7 இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது தமிழ்நாட்டில் 3 நாள் வெப்ப அலை வீசும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...