துபாய்: துபாய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 971501205172, 971569950590, 971507347676, 971585754213 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துபாய் சர்வதேச விமான நிலைய வானிலை தரவுகளின்படி, கடந்த 15ம் தேதி மாலையில் மழை தொடங்கியது. 20 மிமீ மழை பெய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மழை தீவிரமடைந்து நாள் முழுவதும் ஆலங்கட்டி மழை கொட்டியது.
இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 142 மிமீ மழை பதிவாகி உள்ளது. துபாயின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் 94.7 மிமீ மட்டுமே. இப்படி ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால், விமானம் நிலையம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது.
மழைக்கு முன்பாக கடந்த 14ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு அதிகப்படியான மேக விதைப்பால்தான் ராட்சத மழை கொட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
வரலாறு காணாத மழையில் ஓமனில் பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 10 மாணவர்கள் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். ஓமனில் மழைக்கான பலி 19 ஆக அதிகரித்ததாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 971501205172, 971569950590, 971507347676, 971585754213 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்திய சமூக அமைப்புகளுடன் இணைந்து நிவாரண நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன என துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
The post துபாய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.