ராமேஸ்வரம், ஏப்.18: ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ராமரின் படத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. ராமரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரத்தில் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. ராமரின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து ராமர் புகழ் பாடினர்.
தொடர்ந்து ராமகிருஷ்ண மடத்தில் இருந்து சுவாமி நியமானந்தா தலைமையில் நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் ராமரின் படத்துடன் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரதவீதியில் ராமநவமி வாழ்த்து பாடி ஊர்வலமாக சென்றனர். இதில் அமிர்தானந்தமடம் சுடலை, மீனவ பிரதிநிதி தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தங்கச்சிமடம் ஏகாந்த ராமர் கோயிலில் ராமருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர். மாலை 7 மணிக்கு மேல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமர் புறப்பாடு நடைபெற்றது. ராமருக்கு சிறப்பு தீபாராதனை நடந்த பிறகு நான்கு ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
The post ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம் appeared first on Dinakaran.