×
Saravana Stores

தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் இறப்பதாக தகவல்: பொதுசுகாதாரத்துறை ஆய்வு முடிவு

சென்னை: தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் இறப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம் என பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் உயர் ரத்த அழுத்தத்தினால் 2010ம் ஆண்டு சுமார் 1.4 பில்லியன் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது 2025ம் ஆண்டுக்குள் 1.6 பில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் நீரிழிவு நோய் கடந்த மூன்று தசாப்தங்களில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்பதாவது இடத்தில் இந்த நீரிழிவு நோய் உள்ளது.

தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ‘மக்களை தேடி மருத்துவம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை மேலும் கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை ஒரு ஆய்வு மேற்கொண்டது. தமிழகத்தில் கடந்த 2000 முதல் 2021 வரை உயர் ரத்த அழுத்த இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான இறப்புகளை பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இறப்பு காரணத்திற்கான மருத்துவ சான்றிதழ் ( எம் சி சி டி ) ஆண்டு அறிக்கையை பயன்படுத்தி 2000 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் வயது மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் உயர் ரத்த அழுத்த நோயால் இறப்பவர்களின் சதவீதம் 2021ல் தமிழ்நாட்டில் 2.2 சதவீதமாக (ஆண்கள்: 2.1%, பெண்கள்: 2.4%) குறைந்துள்ளது. இருப்பினும் சில ஆண்டு உயர்ந்தும் சில ஆண்டு குறைந்தும் இருந்து இருக்கிறது.

மேலும் இந்த ஆய்வில் உயர் ரத்த அழுத்த நோய்களால் ஏற்படும் பெண் இறப்பு 2014 மற்றும் 2016 தவிர 2002 முதல் 2021 வரை அதிகமாக உள்ளது. ஆனால், வயது அடிப்படையில் 15 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களில் உயர் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 2000 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வின் முடிவில், 2000ம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது நீரிழிவு நோயாளிகள் சதவீதம் அதிகமாக இருந்தாலும் உயர் ரத்த அழுத்த நோய்கள் மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் 2021ல் தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறையத் தொடங்கியுள்ளது. நீரிழிவு நோயால் இறப்பவர்களின் சதவீதம் முந்தைய ஆண்டை விட 2021ல் 1.8 சதவீதம் குறையத் தொடங்கியது. உயர் ரத்த அழுத்த நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் காரணமாக ஒட்டுமொத்தமாக மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களின் இறப்பு அதிகமாக இருந்தது.

The post தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் இறப்பதாக தகவல்: பொதுசுகாதாரத்துறை ஆய்வு முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Health Department ,CHENNAI ,
× RELATED தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி...