×
Saravana Stores

நாளை தேர்தல் நடக்கும் கூச் பெஹாருக்கு செல்லக்கூடாது; மேற்கு வங்க ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கும் கூச் பெஹார் தொகுதிக்கு பயணம் செய்யக்கூடாது என மாநில ஆளுநர் சி.வி.சந்திரபோசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், முதல் கட்டமாகக் கூச் பெஹார் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.இந்த தொகுதியில் பாஜ சார்பில் தற்போதைய எம்பியும் ஒன்றிய அமைச்சருமான நிஷித் பிரமாணிக்,திரிணாமுல் சார்பில் ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியா உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.நாளை அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,நேற்று மாலை 6 மணி முதல் 48 மணி நேரம் வரை பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூச் பெஹாரில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் கடும் வன்முறை ஏற்பட்டது. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாள்கள் கூச்பெஹார் செல்ல மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வந்தன. இந்நிலையில்,கூச்பெஹார் சுற்றுபயணம் செய்யும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் தகவல் அனுப்பியுள்ளது. இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ தேர்தல் நடக்கும் கூச்பெஹார் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சுற்றுபயணம் மேற்கொள்ளவிருப்பதை அறிந்தோம். நாளை அங்கு தேர்தல் நடக்கவிருப்பதால் நேற்று மாலை 6 மணி முதல் 48 மணி நேர அமைதி காலம் தொடங்கியுள்ளது.

இந்த நேரத்தில் ஆளுநர் அங்கு செல்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும்.தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உள்ளூரில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப். 18 மற்றும் ஏப்.19 ஆகிய தினங்களில் தேர்தல் மேலாண்மை பணிகளில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மூழ்கி இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆளுநரின் நடவடிக்கை அரசு அதிகாரிகள், காவல் துறையினரின் பணியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே,திட்டமிட்டுள்ள இந்த பயணத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தி ஆளுநருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தன.

The post நாளை தேர்தல் நடக்கும் கூச் பெஹாருக்கு செல்லக்கூடாது; மேற்கு வங்க ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Cooch Behar ,Election Commission ,West Bengal ,Governor ,Kolkata ,Election Commission of West Bengal ,CV ,Chandra Bose ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா –...