×

பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31 லட்சம் தேக்கு மரத்துக்கு ₹1 லட்சம் ஜிஎஸ்டி வரி வசூல்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனை சாவடியில் கூட்டுறவு சார்-பதிவாளர் நடராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது செங்கோட்டையிலிருந்து மதுரா டிம்பர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று காரைக்கால் வழியாக தரங்கம்பாடிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மடக்கி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில், உரிய ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் ₹3.31 லட்சம் மதிப்பிலான 19 டன் தேக்கு மரங்கள் இருந்ததும், அந்த தேக்கு மரங்கள் தரங்கம்பாடியில் உள்ள ஒரு டிம்பருக்கு கொண்டு செல்வதும் தெரிய வந்தது. பின்னர் அந்த லாரியை தேக்கு மரங்களுடன் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்காக வணிகவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள், தேக்கு மரங்களை ஆய்வு செய்து அவற்றிற்குரிய ஜிஎஸ்டி தொகையான ₹1,01,086 ரூபாயை ஆன்லைன் மூலம் வசூல் செய்தனர். ₹3.31 மதிப்பிலான 19 டன் தேக்கு மரத்திற்கு ஜிஎஸ்டி வரி ₹1 லட்சம் அபராதம் விதித்தது குறித்து வணிக வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘தேக்கு மரத்தை முறையாக அளவீடு செய்து தான் அதற்குரிய ஜிஎஸ்டி வரிதான் போடப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நடைபெறுவதால் இதில் எந்த தவறும் செய்ய முடியாது’ என்றனர்.

The post பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31 லட்சம் தேக்கு மரத்துக்கு ₹1 லட்சம் ஜிஎஸ்டி வரி வசூல் appeared first on Dinakaran.

Tags : Natarajan ,Nandalaru ,Tharangambadi ,Mayiladuthurai ,Mathura Timbers ,Sengottai ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...