×

தேர்தல் விதிமீறல்களை தடுத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்: ஐகோர்ட் கிளை உறுதி

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி உள்ளிட்ட சிலர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்தமனு, நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

போலீஸ் தரப்பில், ‘‘தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக கடந்த 2019ல் 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 1,733 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது. இதே போல் 2021ல் 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 1,414 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், இதுகுறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகம் அடிப்படை கட்டமைப்பு. தேர்தல் காலங்களில் விதிமீறல் அதிகளவில் நடக்கிறது. எனவே ஜனநாயகம் மீண்டும் நிலை நிறுத்தப்படும். அதனால் தேர்தல் விதிமீறல் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.

The post தேர்தல் விதிமீறல்களை தடுத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்: ஐகோர்ட் கிளை உறுதி appeared first on Dinakaran.

Tags : ICourt ,Thanalakshmi ,Madurai ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...