வேலூர், ஏப்.18: வேலூர் மத்திய சிறையில் உள்ள 8 கைதிகள் தபால் வாக்குகளை நேற்று முன்தினம் செலுத்தினர். தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கிற்கான படிவங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதேபோல் சிறையில் உள்ள கைதிகள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வேலூர் உட்பட 9 மத்திய சிறைகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதிகள் ஓட்டுபோட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதன்பின்னரே அவர்கள் தகுதியானவர்களா? என கண்டறியப்பட்டது. இதில் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஓட்டுபோட அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மத்திய சிறையில் 68 கைதிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வாக்களிக்க விருப்பமுள்ளதா? என கேட்கப்பட்டது. ஆனால் அதில் 30 பேர் தங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்றும் 10 பேர் வாக்களிக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக பதில் அளிக்கவில்லை. இயைதடுத்து 8 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்தனர். இதற்கிடையில் சிறையிலேயே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம், சிறை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்ததது. அதன்பேரில் நேற்று முன்தினம் அவர்களுக்கு வாக்குகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 8 பேர் பங்கேற்று தபால் வாக்குகளை செலுத்தினர்.
The post 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில் appeared first on Dinakaran.