×

3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்

முல்லன்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில், முல்லன்பூரில் இன்று இரவு நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் மும்பை, பஞ்சாப் அணிகள் இதுவரை தலா 6 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில்… 2 வெற்றி, 4 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. மொத்த ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் 7வது இடத்திலும், மும்பை அணி 8வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணியின் சொந்தக் களமான முல்லன்பூர் அரங்கத்தில், அந்த அணி 4வது முறையாக களமிறங்குகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

டெல்லி, குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை தழுவியது. இன்று தனது 7வது ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப். அதிரடி வீரர்கள் பலர் இருந்தாலும், யாரும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அணிக்கு பின்னடைவாக உள்ளது.

ஏறக்குறைய அதே நிலைமையில்தான் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் இருக்கிறது. ஹாட்ரிக் தோல்வியால் துவண்டிருந்த மும்பை அணி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்சை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டது. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்துமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிராக போராடி தோற்றது.

இந்த நிலையில், பஞ்சாப் – மும்பை அணிகள் 3வது வெற்றிக்காக இன்று முட்டி மோதுகின்றன. சென்னையுடன் மோதிய கடந்த போட்டியில் ரோகித் அதிரடியாக சதம் விளாசினாலும், மற்ற வீரர்கள் கணிசமாக பங்களிக்கத் தவறியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இஷான், திலக் ஓரளவு கை கொடுத்தனர். அதிரடி வீரர் சூரியகுமார் டக் அவுட்கியும், கேப்டன் ஹர்திக் 2 ரன்னில் வெளியேறியும் ஏமாற்றமளித்தனர். முன்னதாக, சென்னை இன்னிங்சில் கடைசி ஓவரை வீசிய ஹர்திக்26 ரன் வாரி வழங்கினார். அந்த ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, ரன் குவிப்பு மட்டுமல்லாது பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் & கோ உள்ளது. பும்ரா, நபி, கோட்ஸீ சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மத்வால், கோபால், ஹர்திக், ரொமாரியோ பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. இவர்கள் தவறுகளை திருத்திக்கொண்டு துல்லியமாகப் பந்துவீசினால் மட்டுமே பஞ்சாப் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியும்.

இரு அணிகளுமே 3வது வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் மோதிய 31 ஆட்டங்களில் மும்பை 16, பஞ்சாப் 15ல் வென்றுள்ளன.
* அதிகபட்சமாக பஞ்சாப் 230, மும்பை 223 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 119, மும்பை 87 ரன்னில் வீழ்ந்துள்ளன.
* கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் பஞ்சாப் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

The post 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப் appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,PUNJAB ,Mullanpur ,IPL T20 ,Punjab King ,Mumbai Indians ,Muti ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்