×

தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பிரசாரத்தை முடித்தனர்; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் பிரசாரத்தை முடித்தனர். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறும். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி (நாளை) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றம், விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு 19ம் தேதி (நாளை) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் தேர்தலை சந்திக்கிறது. தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் நேற்று மாலை 6 மணி வரை இறுதிக்கட்ட பிரசாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

திருச்சியில் பிரசாரத்தை தொடங்கியவர், சென்னையில் முடித்தார். அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து தனது பிரசாரத்தை முடித்தார். உதயநிதி ஸ்டாலின் கோவை தொகுதியில் கவுண்டம்பாளையத்திலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருவள்ளூர் மற்றும் சென்னையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் நாகப்பட்டினம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விருதுநகர், பாமக தலைவர் அன்புமணி தர்மபுரி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூரில் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (19ம் தேதி) வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதாவது ஜூன் 4ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

* 68,321 வாக்குப்பதிவு மையத்துக்கும் இன்று வாக்கு இயந்திரங்கள் அனுப்ப ஏற்பாடு
இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1,59,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 88,783 விவிபேட் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது வாக்குப்பதிவுக்கு தேவையான எண்ணிக்கையைவிட 20 சதவீதம் அதிகம். இன்று மாலைக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் முழு போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குப்பதிவு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதற்காக 6,137 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டல குழுவிலும் 2 வருவாய் துறை அதிகாரிகள், 2 துப்பாக்கி ஏந்திய போலீசார், ஒரு பெல் நிறுவன இன்ஜினீயர் இருப்பார். ஒரு மண்டல குழுவினர் குறைந்தபட்சம் 10 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்வார்கள். அதேநேரம், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் நாளை மாலைக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் கையெழுத்து போட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பிரசாரத்தை முடித்தனர்; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puduwa ,Anal Parantha Prasaram ,Chief Minister ,Chennai ,K. Stalin ,Salem ,Anal Paranda Prasaram ,Principal ,Mu. K. Stalin ,Edappadi Palanisami Saleh ,MLA ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு