×

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை!!

சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற நெல்லை விரைவு ரயிலில் கொண்டு சென்ற, 4 கோடி ரூபாயை, கடந்த 6ம் தேதி தேர்தல் பறக்கும் படை கைப்பற்றினர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் விசாரணையில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக தான் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாக்குமூலம் அடிப்படையில், நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க தாம்பரம் காவல்நிலையத்தினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.மேலும் காவல்துறையினர் வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், நயினார் நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு வழக்கில், “ரூ.4 கோடி ரொக்கம் பிடிபட்டது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக புகார் அளித்தும் அமலாக்கத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்,”இவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் மற்றொரு வழக்கில், ” வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவே ரூ. 4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. ஆகவே அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த 2 வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் முறையிட்ட நிலையில், வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

The post ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayanar Nagendran ,Nella ,Chennai ,Tirunelveli ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...