×
Saravana Stores

ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும்: ஐகோர்ட் கிளை வேதனை!

மதுரை: தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசு, பணம் உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்பவர் கடந்த 2011ம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக காவல்துறையினரால் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசு, பணம் உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என தெரிவித்தார். இதற்கான தண்டனை குறைவாக இருப்பதால் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை பலவகையில் விநியோகிக்கும் பழக்கம் குறையாமல் உள்ளதாகவும், தேர்தல் சமயத்தில் பணம் விநியோகம் செய்ததாக பதிவாகும் வழக்குகளும் அதிகரித்து வருவதாகவும் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்குகளை திறம்பட நடத்துவதற்கான வழிமுறையை கண்டறிய இந்த நீதிமன்றம் விரும்புவதாக குறிப்பிட்ட நீதிபதி புகழேந்தி, 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை மற்றும் அந்த வழக்குகளின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், குற்றம் நிருபிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை?, தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை?, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்படும் வழக்குகளை எப்படி நடத்துகிறீர்கள்? உள்ளிட்ட விவரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் பத்தி அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி புகழேந்தி ஒத்திவைத்தார்.

The post ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும்: ஐகோர்ட் கிளை வேதனை! appeared first on Dinakaran.

Tags : Icourt ,Madurai ,High Court ,Dhanalakshmi ,Usilampatti ,
× RELATED மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை...