×

இந்தியாவை காப்பாற்றிட இந்தியா கூட்டணி வெல்வது உறுதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும் நபர் தான் பிரதமராக வரப்போகிறார்: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு

சென்னை, ஏப்.17: இந்தியாவை காப்பாற்றிட இந்தியா கூட்டணி வெல்வது உறுதி. முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை சுட்டிக் காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வருவார், என்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், வில்லிவாக்கம் மேற்கு பகுதிக்கு உட்பட்ட என்.வி.என்.நகர், டி.வி.நகர், காந்தி மெயின் ரோடு, அண்ணாசிலை என்.வி.என். நகர், நேரு நகர் மெயின் ரோடு, கதிரவன் பிரதான சாலை, தங்கம் காலனி, வசந்தம் காலனி, 3வது பிரதான சாலை, 20வது மெயின் ரோடு, 19வது மெயின் ரோடு, திருமங்கலம் காலனி, நாவலர் நகர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, வில்லிவாக்கம் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட வெள்ளாள தெரு, பி.இ.கோயில் மேற்கு மாட வீதி, கே.எச்.ரோடு, 96வது வட்டம் தாகூர் நகர், கே.எச்.ரோடு, கே.எம்.பி. கோயில் தெரு, துரைசாமி தெரு, யுனைடெட் இந்தியா நகர், போர்ச்சியஸ் சாலை, புது தெரு, பாளையக்கார தெரு, அப்பாதுரை மெயின் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர் கூ.பி.ஜெயின், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர் வாசு ஆகியோரும் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் தயாநிதி மாறன் பேசியதாவது:
பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைப்பேன் என்று சொன்னார். ஆனால், ஒரு ரூபாய் கூட கணக்கில் வரவு வைக்கவில்லை. மழை வெள்ளத்தில் நாம் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, இப்போது வாக்குக்காக வருகிறார்.

தேர்தல் வந்தால் தமிழ் மீது பாசம். தமிழர்கள் மீது பாசம். ஆனால் நாம் துன்பப்பட்ட போது எட்டிக்கூட பார்க்காமல் இருந்தவர் தான் மோடி. நமது முதல்வர் புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம் என்று பல முத்தான திட்டங்களை கொடுத்துள்ளார். அதுவும் காலை உணவுத் திட்டம் உலகத்திலே முதன் முதலாக கொண்டு வந்தவர் முதல்வர் தான்.

இந்த திட்டத்தை கனடா பிரதமர் பாராட்டி, தன் நாட்டிலும் இதை செயல்படுத்துவேன் என்று கூறியுள்ளார். நம் தலைவர் கொண்டு வந்த இந்த திட்டம் உலகத்திற்கே வழிகாட்டுகிற திட்டமாக அமைந்துள்ளது. நம் தலைவர் தரும் திட்டங்கள் அனைத்தும் உலகத்திற்கே பயன்படுகிற திட்டமாகத்தான் அமைகிறது. நம் தலைவர் தமிழ்நாட்டிற்கு மட்டும் சிந்திப்பதில்லை. இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்காகவும் சிந்தித்து அருமையான பயனுள்ள திட்டங்களாகத்தான் தருகிறார்.

இந்தியாவைக் காப்பாற்றிட இந்தியா கூட்டணி வெல்வது உறுதி. அப்படி வெல்லும் போது கண்டிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை சுட்டிக் காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக வருவார். அதற்காக வருகிற ஏப்ரல் 19ம் தேதி உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியாவை காப்பாற்றிட இந்தியா கூட்டணி வெல்வது உறுதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும் நபர் தான் பிரதமராக வரப்போகிறார்: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,K. ,Stalin ,Daimuka ,Central ,Chennai ,parliamentary ,Dayaniti Maran ,Principal ,Mu. K. ,dimuka ,Central Chennai Parliamentary Constituency Dimuka ,India Alliance ,PM ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் கார்கேவிற்கு...