×
Saravana Stores

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

திருச்சி.ஏப்.17: திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகம், புதுவை உள்பட 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நாளைமறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு அரசியல்கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். நாளை மாலையுடன் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் ரங்கம் சட்டமன்ற தொகுதி, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, கந்தா்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆறு சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளை எண்ணுவதற்காக திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பெட்டிகளை வைப்பதற்கு வரிசை எண்கள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்ட வசதிகள் குறித்தும், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்றுவரும் பிரத்யேக வழிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது திருச்சி வருவாய் கோட்டாட்சியா் அருள், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளா்(கட்டிடம்) பொறியாளர் இரத்தினவேல், மாவட்ட ஆட்சியாின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சீனிவாசன், உதவி இயக்குநா் ஊராட்சிகள் குமார் மற்றும் வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

The post திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Parliamentary Constituency ,Collector ,Pradeep Kumar ,Parliamentary ,Constituency ,18th Lok ,Sabha ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...