×
Saravana Stores

அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை நிறைவு செய்தார்

திருச்சி, ஏப்.17: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சமயபுரம் மாரியம்மன், பக்தர்களுக்காக மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம்.

இந்நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள், நைவேத்தியங்கள் கிடையாது. அம்மனுக்கு துள்ளுமாவு, இளநீர், பானகம் ஆகியவை மட்டுமே படைக்கப்படும். சித்திரைத் தேர்த்திருவிழாவைமுன்ன்னிட்டு அம்மன் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தன்று இரவு அம்மன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை நிறைவு செய்வார்.

இதற்காக மாரியம்மனின் சகோதரியாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து ஏராளமான அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு ஆகியவை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு படைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சமயபுரம் கோயில் தேரோட்டம் நேற்று காலை தொடங்கி மதியம் வரை நடந்தது. இரவு 9 மணியளவில் திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் அபிஷேக திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள், மேளதாளங்கள் முழங்க இரவு 10 மணியளவில் சமயபுரம் சென்றடைந்தனர்.

இந்த தளிகை மற்றும் சீர்வரிசை சமயபுரம் வந்தபின் அம்பாள் தேர்த்தட்டிலிருந்து இறங்கி கோயிலுக்குள் சென்று அங்கு அபிஷேக அலங்காரம் கண்டருளினார். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை நிறைவு செய்தார்.

The post அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை நிறைவு செய்தார் appeared first on Dinakaran.

Tags : Samayapuram Mariamman ,Akilandeswari temple ,Tiruchi ,Masi ,Panguni ,Chitrai ,Trichy Samayapuram Mariamman Temple ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள்...