தஞ்சாவூர், ஏப். 17: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடுகளையும், போக்குவரத்து வசதிக்கான ஏற்பாடுகளையும், காவல்துறை பாதுகாப்பு பணிகள் குறித்தும், குறித்த நேரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள வாக்குப் பதிவு பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும், மாதிரி வாக்குப் பதிவினை காலை 5.30 மணிக்கு நடத்த வேண்டுமெனவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டுமெனவும், சக்கர நாற்காலிகள் பயன்படுத்த வேண்டுமெனவும், 100% வாக்குப் பதிவு நடைபெற அனைத்து அலுவலர்களும் நல்ல முறையில் பணியாற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தமிழ்நங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரவீனா குமாரி, முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வாக்குப்பதிவு பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.