×

2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்: தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக ஓபிஎஸ் தலைமைக்கு செல்லும்; கொளுத்தி போட்ட டிடிவி

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில், அமமுக வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்னை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார் என்பது உண்மை. அதற்கு சிலர் காரணம். அதனை வெளியில் சொல்ல முடியாது. நான் இந்த தொகுதிக்கு சிலர் செஞ்ச சதியால வர முடியவில்லை. எனக்கு துரோகம் செய்தவர்களை வெளிப்படையாக சொல்ல விரும்பலை. அவர்கள் சொல்ல முடியாத நபர்கள். சொல்லக்கூடாத நபர்கள். இதுகுறித்து என் சுயசரிதம் வெளிவரும்போது வெளியிடுவேன். தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஓ.பன்னீர்செல்வம் தலைமைக்கு செல்லும்.

2001, செப்டம்பர் மாதம் முதல்வர் பதவிக்கு நான் காய் நகர்த்தியிருந்தால் முதல்வராக வந்திருக்க முடியும். 2017, பிப்ரவரி 14ம் தேதி பதவியேற்க முடியாமல் பெங்களூரு சிறைக்கு சென்றபோது, நான் நினைத்திருந்தால் பதவிக்கு வந்திருக்க முடியும். எடப்பாடி என்ன உலக பெரிய தலைவரா? எனக்கு பதவி மீது பெரிய ஈடுபாடு கிடையாது. 1991ல் ராஜ்யசபா உறுப்பினராக்க ஜெயலலிதா முயன்றபோது நான் வேண்டாம் என்றேன். 1999ல் ஜெயலலிதா என்னை பெரியகுளம் தொகுதி எம்பி தேர்தலில் நிறுத்தினார். சசிகலா அதிமுகதான் தனது கட்சி என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு நடந்து வருகிறது. எனவே, அவரால் அதிமுக அல்லாதவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியாததால் செய்யவில்லை.

இரட்டை இலையை பலவீனப்படுத்தி வருகிறார் பழனிசாமி. ஐந்து, ஆறுபேர் சேர்ந்து சுயநலக்கும்பல், பதவி வெறி, துரோக சிந்தனை, தான்மட்டும் வாழணும் மற்ற யாரும் இருக்கக் கூடாது என்ற சிந்தனை. எம்ஜிஆரை 1,500 பேர் சேர்ந்து நீக்கினார்கள். இதுபோன்ற நிலைமை அதிமுகவில் நடக்கக்கூடாது என்பதற்காக, உறுப்பினர்கள்தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என உருவாக்கிய அடிப்படையை சிதைத்து விட்டார் பழனிசாமி. அதனால் அதிமுக பலவீனப்பட்டுவிட்டது. அதில் பெயருக்காகவும், சின்னத்திற்காகவும் உள்ள தொண்டர்கள் அங்கிருந்து விலகி எங்களுடன் சேருவார்கள். இந்த தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்தை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

* முதல்வர் ஆசையால்தான் டிடிவியை கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார்: தங்கதமிழ்ச்செல்வன் தடலாடி
தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தங்கதமிழ்ச்செல்வன், செய்தியாளர்களிடம் பேசியதாவது: டிடிவி.தினகரன் 14 ஆண்டுகள் விலகி இருந்ததற்கும், அவரை ஜெயலலிதா நீக்கியதற்குமான வெளிப்படையான காரணத்தை ஓ.பன்னீர்செல்வம் பொதுமேடையில் கூறியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அதிமுகவினரை தன் பக்கம் இழுத்து டிடிவி.தினகரன் முதலமைச்சராக வேண்டும் என செயல்பட்டதாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் காரணமாகத்தான், இவரை கட்சியை விட்டு நீக்கி 15 வருடம் வனவாசம் போக வைத்தார். இவர் நல்லதுக்கு வனவாசம் போகவில்லை. துரோகம் செய்ததால்தான் சசிகலாவையும், டிடிவி.தினகரனையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்தார். இதுதான் யதார்த்தமான உண்மை. இவ்வாறு கூறினார்.

* பாஜ பற்றி வாய் திறக்காத எடப்பாடி அமெரிக்காவில் தேர்தல் நடக்குது நினைச்சுட்டாருபோல… ராஜிவ்காந்தி திமுக மாணவர் அணி தலைவர்
1. கடந்த தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் பாஜ நிறைவேற்றி விட்டது என வாய்கூசாமல், அண்ணாமலை பொய் சொல்வதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளதே?
பிரதமர் மோடி அவரது வாக்குறுதியை நிறைவேற்றியதால் தான் கோவையில் மெட்ரோ ரயில் ஓடுகிறது. அந்த மெட்ரோ ரயில் ஓடுவதால் தான் காந்திபுரத்தில் இருந்து சத்தி ரோடுக்கு மக்கள் 20 நிமிடத்தில் சென்று விடுகின்றனர். கடந்த தேர்தலில் பாஜ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதால் தான் நேரடியாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்கிறார்கள். என்னத்த சொல்ல? என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதேபோன்று தான் அண்ணாமலையின் பொய்யும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, புதிதாக 5,000 மில்கள் திறக்கப்பட்டதாம். சேலம்-கோவை இடையே ராணுவ கேரிடர் அறிவிக்கப்பட்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருக்காம். இவை அனைத்துமே மோடி வாக்குறுதியை நிறைவேற்றியதால் தான் நடந்திருக்கு என்று சொன்னால் நம்புற மாதிரியா இருக்கு. அவர் சொல்லுகிற பொய்களை பார்த்தா கனவில் கூட நடக்காது. கோவை மக்களுக்குத் தான் வெளிச்சம்.

2. இறுதிக்கட்ட பிரசாரத்தில் கூட மோடியையோ, ஒன்றிய பாஜ அரசை எதிர்த்தோ, எடப்பாடி பழனிசாமி ஒரு கேள்விகூட கேட்கவில்லை. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நடப்பது அமெரிக்காவின் நாடாளுமன்ற தேர்தல் என எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறார் போல… அதனால் தான் இந்தியாவின் பிரதமரைப் பற்றி அவர் பிரசாரத்தில் மட்டுமல்ல, எப்போதுமே பேசுவதே இல்லை. அவர் விரைவில் சுயநினைவுக்கு வந்துவிடுவார். அதனால் யாரும் அவரை தவறாக நினைக்க வேண்டாம்.

3. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறி இருப்பது மிரட்டல் என நினைக்கிறீர்களா?
இது முழுக்க முழுக்க மிரட்டல் தான். எனக்கு ஓட்டுப்போட வைக்க வேண்டும். இல்லையெனில் உன் கட்சியை காலி பண்ணி விடுவேன் என எடப்பாடி பழனிசாமியை மிரட்டி பணிய வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி இல்லை என அவர் கூறியதால் தற்போது மிரட்டி வருகின்றனர். கடந்த காலத்தில், தான் சம்பாதித்து வைத்த ஊழல் பணம், கட்சி ஆகியவற்றை காப்பாற்ற மோடியின் காலில் எடப்பாடி விழுந்து கிடந்தார். அதனால் சிறந்த அடிமை என மோடியும் நினைத்து சில சலுகைகளை செய்து கொடுத்தார். தற்போது அந்த அடிமை சில இடங்களில் உளற ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாகத் தான் அவரை மிரட்டி வருகின்றனர்.

4. பாஜவின் தேர்தல் அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் அமல் ஆகியவை இடம்பெற்றுள்ளது பற்றிய உங்கள் கருத்து?
இந்தியா பண்முகத்தன்மை கொண்ட நாடு. அரசியலமைப்பு சட்டமும் அதைத் தான் கூறுகிறது. இதை மாற்றுவது தான் பாஜவின் நோக்கமாக உள்ளது. அதன்படி தான் அவர்கள் தேர்தல் வாக்குறுதியும் உள்ளது. நாங்கள் இந்தியாவின் பண்முகத்தன்மை வேண்டும் என பிரசாரம் செய்கிறோம், ஆனால் பாஜக அதனை வேண்டாம் என பிரசாரம் செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக நடத்தும் போர்.

The post 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்: தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக ஓபிஎஸ் தலைமைக்கு செல்லும்; கொளுத்தி போட்ட டிடிவி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,OPS ,DTV ,Dhinakaran ,AAM MUK ,BJP ,Theni ,Jayalalithaa ,Koluthi Putta ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...