×

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக அறையில் பயங்கர தீ விபத்து: முக்கிய கோப்புகள் எரிந்து நாசம்?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வடக்கு பிளாக்கில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலக அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் உயர் பாதுகாப்பு மிகுந்த ரைசினா ஹில்ஸ் பகுதியில் ஒன்றிய உள்துறை மற்றும் பணியாளர் அமைச்சகங்கள் அமைந்துள்ளன. நார்த் பிளாக் என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் நேற்று காலை 9.15 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அலுவலக கட்டிடத்தில் இருந்து புகை மூட்டம் வெளியே வந்தது. தீ விபத்து ஏற்பட்ட போது உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு இல்லை. ஆனால் பல மூத்த அதிகாரிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி தீயணைப்புத்துறை சார்பில் 7 தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 9.35 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. சுமார் 20 நிமிடம் பற்றி எரிந்த தீயால் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள மின் உபகரணங்கள் சேதம் அடைந்தன.

மின்சார கசிவால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உள்துறை மற்றும் பணியாளர் அமைச்சகத்தில் உள்ள முக்கிய ஆணவங்கள் எரிந்து நாசம் அடைந்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இந்த தீவிபத்தில் யாரும் காயம் அடையவில்லை. கோப்புகள் எதுவும் சேதம் அடையவில்லை. ஒரு சில பொருட்கள் ,உபகரணங்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் ஒரு ஜெராக்ஸ் இயந்திரம், சில கணினிகள் மற்றும் சில ஆவணங்கள் தீயில் சேதம் அடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக அறையில் பயங்கர தீ விபத்து: முக்கிய கோப்புகள் எரிந்து நாசம்? appeared first on Dinakaran.

Tags : Ministry of Home Affairs ,Parliament ,New Delhi ,Union Home Ministry ,North Block ,Union Home and Personnel Ministries ,Raisina Hills ,Dinakaran ,
× RELATED சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின்...