×
Saravana Stores

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான ரிசல்ட் வெளியீடு: அகில இந்திய அளவில் 1,016 பேர் வெற்றி: தமிழகத்தில் 42 பேர் தேர்ச்சி பெற்று சாதனை; முதலிடத்தை திருவள்ளூரை சேர்ந்த புவனேஷ்ராம் பிடித்தார்

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஆண்டு 1143 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ், 37 ஐஎப்எஸ் பதவிகள் மற்றும் 613 குரூப் ஏ பதவிகள் அடங்கும். இப்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு மே 28ம் தேதி நடந்தது. சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூனில் முதல்நிலை தேர்வு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடந்தது.

தொடர்ந்து டிசம்பர் 8ல் மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 2,884 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 134 பேர் தமிழ்நாட்டை சாந்தவர்கள் ஆவர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஜனவரி 2 முதல் ஏப்ரல் 10 வரை நடந்தது. நேர்காணல் முடிந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று வெளியிட்டது. இதில் அகில இந்திய அளவில் 1016 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை முறையே ஆதித்யா வஸ்தவா, அனிமேஷ் பிரதான், டோனூரு அனன்யா ஆகியோர் பிடித்துள்ளனர்.

இதுபற்றி சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: யுபிஎஸ்சி 2023ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1016 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 40 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். இந்திய அளவில் 273 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் டி.புவனேஷ்ராம் 41ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் முழு நேர பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றவர் ஆவார். அகில இந்திய அளவில் 79ம் இடத்தை டாக்டர் எஸ்.பிரசாந்த் பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த கே.நேகா என்ற மாணவி அகில இந்திய அளவில் 175ம் இடத்தை பெற்றுள்ளார். இவர் 22வது வயதில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். முதல் 100 இடங்களில் எங்கள் அகடாமியில் படித்த 21 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள். அடுத்த 15 நாளில், மதிப்பெண் விவரங்களை யுபிஎஸ்சி வெளியிடும். இதில் ரேங்க் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்று ஒன்றரை மாதத்தில் அறிவிக்கப்படும். ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் ஒன்றிய அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். பின்னர் முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* இந்திய அளவில் 41வது இடம், தமிழ்நாட்டில் முதலிடம்
புவனேஷ்ராம் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்தவர் ஆவார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் 27 பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 42 உயர்ந்தது. தற்போது 2023ம் ஆண்டு தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மீண்டும் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல்வர் வாழ்த்து
திமுக தலைவர் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு: யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வு, 2023ல் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தேசத்துக்காகப் பணியாற்ற அடியெடுத்து வைக்கும் அவர்களது பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர்கள் செல்லும் இடமெல்லாம் நல்மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார்களாக! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான ரிசல்ட் வெளியீடு: அகில இந்திய அளவில் 1,016 பேர் வெற்றி: தமிழகத்தில் 42 பேர் தேர்ச்சி பெற்று சாதனை; முதலிடத்தை திருவள்ளூரை சேர்ந்த புவனேஷ்ராம் பிடித்தார் appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Bhuvaneshram ,Thiruvallur ,CHENNAI ,Union Public Service Commission ,UPSC ,Tiruvallur ,
× RELATED தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யும்