×
Saravana Stores

இன்றுடன் பிரசாரம் முடியும் நிலையில் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை

* வெளியூரில் இருந்து வந்தவர்கள் தொகுதியில் இருக்க கூடாது

* 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக செல்ல அனுமதி இல்லை

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கிகரீக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் த.பிரபுசங்கர் ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- 72 மணிநேரம் முன்னதாக ஒவ்வொரு வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், வேட்பாளரது முதன்மை முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனம், வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கோரும் பட்சத்தில் அக்கட்சியினைச் சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேற்படி வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும். கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. தனிநபரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. எஸ்எம்எஸ்ஐ மொத்தமாக அனுப்புவதோ அல்லது வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதோ கூடாது.

அனைத்து வேட்பாளர்களும் 48 மணிநேரத்திற்கு முன்பாக (இன்று மாலை 17ம் தேதி மாலை 6 மணிக்குள்) தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை நிறுத்திட வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது. வெளியூரிலிருந்து பிரசாரத்திற்காக வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய நாடாளுமன்ற தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள் தொடர்ந்து தொகுதியில் இருக்க அனுமதி இல்லை. 5 நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதி இல்லை.

அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருப்பின் முன்னரே அனுமதி பெற வேண்டும். உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை. அதே நேரத்தில் தேர்தல் நாளன்று, வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு.

ஓட்டுநர் உள்பட 5 நபருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு. வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபர்கள் செல்ல அனுமதி இல்லை. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்ட வேண்டும். அனுமதி பெறப்பட்ட வாகனத்தில் வாக்காளர்களை இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ, வாக்குச்சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்துச் செல்லக்கூடாது.

வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியில் தொங்கும் சீட்டை வாக்குகள் விழக்கூடிய பெட்டியில் விழவைக்க எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். மேற்பட்ட விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கும் நபர்கள் அதே வாக்குச்சாவடியின் வாக்காளராக இருக்க வேண்டும். கிரிமினல் முன்னோடி உள்ளவர்கள் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்யபிரசாத், கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், வட்டாட்சியர் (தேர்தல்) சோமசுந்தரம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* முகவர் மாற்றம் கூடாது
வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கபடுவர். தேர்தல் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முகவர்கள் மாற்றம் செய்ய அனுமதியில்லை. வாக்குச்சாவடிக்குள் நுழையும் போதும், வெளியே செல்லும்போதும் சோதனைக்கு உட்படுத்துவதை எதிர்க்க கூடாது. வாக்குச்சாவடிக்குள் தண்ணீர், திண்பண்டங்கள், உணவுப்பொருட்கள் கொண்டுவர கூடாது.

The post இன்றுடன் பிரசாரம் முடியும் நிலையில் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Thiruvallur: District Collector's Office Partnership ,Thiruvallur District Collector's Office ,
× RELATED பெங்களூரு போலீஸ் விசாரணை பிரபல டைரக்டர் மீது ஓரின சேர்க்கை புகார்