×

வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டி தேர்தல் விதிமுறை ஆய்வு கூட்டம் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு

* மாலை 3 மணிக்கு மேல் முகவர் மாற்றம் செய்யக்கூடாது

செங்கல்பட்டு: தேர்தல் அன்று வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டி விதிமுறைகள் குறித்து ஆய்வு கூட்டத்தில், ‘பிரசாரத்திற்கு வந்தவர்கள், தொகுதிக்க சம்பந்தம் இல்லாவதர்கள் ஆகியோர் வெளியே வேண்டும். மேலும், தேர்தல் அன்று வாக்குச்சாவடி முகவர்களை மாலை 3 மணிக்கு மேல் மாற்ற அணுமதி இல்லை என ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அருண்ராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம் முன்னதாக பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அருண்ராஜ் தலைமை தாங்கினார். பின்னர், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது: 72 மணி நேரம் முன்னதாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

ஒவ்வொரு வேட்பாளருக்கும், வேட்பாளர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனமும் வேட்பாளரது முதன்மை முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும், வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கோரும் பட்சத்தில் அக்கட்சியினை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனித்திட ஏதுவாக, ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேற்படி வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும்.

அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு பைலட் கார்களுக்கு அனுமதி இல்லை. வாக்குப்பதிவு முடியும் வரை இனம், மதம், மற்றும் மொழி சார்ந்த தூண்டல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. தனிநபரை பாதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. 48 மணிநேரம் முன்னதாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: அனைத்து வேட்பாளர்களும் 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரசாரங்கள் செய்வதை நிறுத்த வேண்டும் (இன்று மாலை 6 மணி வரை).

48 மணி நேரத்திற்கு முன்னதாக ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது. வெளியூரிலிருந்து பிரசாரத்திற்காக வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய நாடாளுமன்ற தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள் தொடர்ந்து தொகுதியில் இருக்க அனுமதியில்லை. 5 நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதியில்லை. 3 முறை வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்தான விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் 17ம் தேதிக்குள் (அளிக்கப்பட்ட காலக்கெடு 8.4.2024 முதல் 17.4.2024) அளித்து இவ்வலுவலகத்தில் தாக்கல் செய்திட வேணடும்.

24 மணிநேரம் முன்னதாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: 24 மணி நேரம் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருப்பின், 48 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும். உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவுவிக்கப்படும் வரை கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் அனுமதி இல்லை.

தேர்தல் நாளன்று பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: தேர்தல் நாளன்று வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்களுக்கு தலா ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஓட்டுநர் உள்பட 5 பேருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு. வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபர்கள் செல்ல அனுமதி இல்லை. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்டப்பட வேண்டும்.

மேற்கண்டு அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றி செல்ல கூடாது. வாக்காளரை வாக்களித்திட வாக்காளரின் இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ, வாக்குச்சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்து செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தரக்கூடாது. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது.

ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முகவர்கள் மாற்றம் செய்ய அனுமதியில்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), மற்றும் சிறப்பு வட்டாட்சியர் (தேர்தல்), ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்கள் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

* தேர்தல் விழிப்புணர்வு
பல்லாவரம் ரேடியல் சாலையில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பவு உறுதி செய்யும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில், கல்லுரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மனித சங்கிலி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டார். இதில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, தாம்பரம் துணை காவல் ஆணையாளர் பவன் குமார் ரெட்டி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், மகளிர் திட்ட இயக்குநர் மணி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டி தேர்தல் விதிமுறை ஆய்வு கூட்டம் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!