×
Saravana Stores

பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் இன்று காலமானார்

திருவனந்தபுரம்: பழம்பெரும் மலையாள சினிமா இசையமைப்பாளரும், பாடகரும், நடிகர் மனோஜ் கே.ஜெயனின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (90) இன்று காலமானார். கடந்த 1968ல் பூமியிலே மாலாகமார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கே.ஜி. ஜெயன். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது தம்பி விஜயனுடன் இணைந்து பின்னர் மலையாள பக்தி பாடல்களை பாட தொடங்கினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் போது ஒலிபரப்பாகும் கோயில் நடை துறன்னு என்ற பாடலை இவரும், இவரது தம்பி விஜயனும் சேர்ந்து தான் இசையமைத்து பாடினர். 2 பேரும் சேர்ந்து ஏராளமான பக்தி இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அண்ணனும், தம்பியும் சேர்ந்துதான் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும்பாலான கோயில் விழாக்களில் பாடி வந்தனர். இவர்கள் இருவரு்ம் கேரளாவில் ஜெய விஜய சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டு வந்தனர்.  இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொச்சி திருப்பூணித்துறையில் உள்ள வீட்டில் வைத்து கே.ஜி.ஜெயன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2019ம் ஆண்டு பத்ம விருதும், 1991ல் சங்கீத நாடக அகாடமி விருதும், 2013ல் ஹரிவராசனம் விருதும் அவருக்கு கிடைத்தது. மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மனோஜ் கே.ஜெயன் மற்றும் பிஜு கே.ஜெயன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

The post பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் இன்று காலமானார் appeared first on Dinakaran.

Tags : KG Jayan ,Thiruvananthapuram ,Manoj K. Jayan ,K.G. ,
× RELATED திருவனந்தபுரம் வாரியத்துடன் மதுரை இணைப்பு: வைகோ எதிர்ப்பு