டெல்லி: மத்தியில் ஆட்சி அமைந்தவுடன், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் முத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் ராணுவம், விமானம், கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் பணி புரியும் வகையில் அக்னிபாத் என்ற திட்டம் கடந்த 2022ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதற்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இதிலுள்ள பல்வேறு குளறுபடிகள் காரணமாக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே வடமாநிலங்களில் ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள், வாகனங்களுக்கு தீ வைத்து எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரசும் இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் மத்தியில் ஆட்சி அமைந்தவுடன், அக்னிபாத் திட்டம் ரத்து செய்துவிட்டு, ராணுவத்தில் பழைய நிரந்தர ஆள்சேர்ப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவோம் என காங்கிரஸ் முத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தையும், நாட்டைக் காக்க வேண்டும் என்று கனவு காணும் துணிச்சலான இளைஞர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
இது இந்திய ராணுவத்தின் திட்டம் அல்ல
நரேந்திர மோடியின் அலுவலகத்தில் செய்யப்பட்ட திட்டம், ராணுவத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது.
தியாகிகளை வித்தியாசமாக நடத்த முடியாது, நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் தியாகி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
இந்திய அரசு அமைந்தவுடன், இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய நிரந்தர ஆள்சேர்ப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மத்தியில் ஆட்சி அமைந்தவுடன், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்: ராகுல் காந்தி உத்தரவாதம்!! appeared first on Dinakaran.