நீலகிரி: கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பங்குனி திருவிழா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராமங்களில் பிரதானமானது கவுஞ்சி என்ற கிராமம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் கேரட், பூண்டு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்வது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இவர்கள் முன்னோர்களை நினைத்து பங்குனி பெருந்திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். கடைசியாக 2002ம் ஆண்டு இந்த திருவிழா கொண்டாடப்பட்டது.
அதன்பிறகு தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு 5 நாட்கள் விமர்சியாக நடத்தப்பட்டுள்ளது. மஞ்சுவிரட்டு, காளியாட்டம், கூரை பிடித்து ஆடுதல் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளும் விழாவில் முன்னெடுக்கப்படுகிறது. கவுஞ்சி கிராமத்தில் முன்பு வாழ்ந்து இறந்ததாக கூறப்படும் துப்பிமல், விலகு, காடர், சொம்மலமாரி ஆகிய முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடியவை தான் பங்குனி பெருந்திருவிழா. இதையொட்டி பாரம்பரிய முறைப்படி 5 பேருக்கு பரிவட்டம் கட்டி பட்டம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
பட்டங்கள் கொடுக்கப்பட்ட பிறகு ஊருக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள். அதேபோன்று அவர்களுக்கு ஊர் மக்களும் கட்டுப்பட்டவர்கள் என்று பெருமையாக கூறுகின்றனர். திருவிழா தொடங்கியது முதல் முடியும் வரை கிராமத்திற்குள் யாரும் செருப்போ, தீய பழக்கவழக்கங்களிலோ ஈடுபடக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. இதனை இளைஞர்களும் கடைபிடித்து வருகின்றனர். திருவிழா முடிந்த பிறகு விவசாயம் மற்றும் கால்நடைகள் செழுமையாக இருக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
The post கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு பங்குனி பெருந்திருவிழா; கவுஞ்சி மலைக்கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.