- மயலதுதரா
- கலெக்டர் அலுவலக கூட்டாட்சி
- மயிலாடுதர மாவட்ட சேகரிப்பாளர் அலுவலகம்
- மாவட்ட கலெக்டர்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- மகாபாரதி
மயிலாடுதுறை, ஏப்.16: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகாபாரதி தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி கூறியதாவது:
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குசாவடிகளும், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், பூம்புகார் தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 89 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாக்குசாவடிகளில் நுண் பார்வையாளராக மத்திய அரசு பணியில் உள்ள 109 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குசாவடியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணித்திட வேண்டும். நுண்பார்வையாளராக பணியாற்ற உள்ள அலுவலர்கள் வாக்குப்பதிவன்று காலை மாதிரி வாக்குப்பதிவிற்கு முன்பாகவே பணிக்கு செல்ல வேண்டும்.
வாக்குசாவடிக்கு சென்றவுடன் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாய்தளம், மின்வசதி, கழிவறை ஆகியவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவன்று முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவை வாக்குப்பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் 50 வாக்குகள் பதிவு செய்து மாதிரி வாக்குப்பதிவு நடத்திட வேண்டும். வாக்குப்பதிவின்போது வாக்குசாவடியில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இதர ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வாக்களிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பதற்றமான வாக்குசாவடிகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக கண்காணித்திட வேண்டும். வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் படிவத்தில் கடைசியாக உள்ள பதிவுக்கு பின்பு பதிவு செய்யப்பட்ட வாக்குகள், வாக்குப்பதிவு முடிவடைந்த நேரம் குறிப்பிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் முகவர்களிடம் கையொப்பம் பெற்றிட வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்பு நுண்பார்வையாளர்கள் தங்களது அறிக்கையினை வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்தலை சிறப்பாக நடத்திட அனைவரும் முழுமையாக பணியாற்றிட வேண்டும் என்று கூறினார்.
இப்பயிற்சி வகுப்பில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
The post பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி appeared first on Dinakaran.