×

வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை விடறதில்ல… பாஜவுக்கு எடப்பாடி எச்சரிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் மீது அளவிட முடியாத அன்பும், பாசமும், கொண்டிருக்கும் அதிமுக உடன்பிறப்புகளுக்கு வணக்கம். அதிமுக என்னும் வயலில் இருந்த களைகள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டு, அருமையான வெள்ளாமைக்கு நாம் தயாராக இருக்கிறோம். பாஜ, தேசிய கட்சியாக இருந்தாலும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி நம்மை பற்றி பொய் பிரசாரம் செய்வதையே தங்களின் முழு நேர தேர்தல் பிரசாரமாக்கிக் கொண்டிருக்கிறது. நமது இயக்கத்தை பிளவுபடுத்த அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம்.

வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும், ஆளும் கட்சிக்கு இருக்கும் அதிகார மமதையில் நடத்தப்படும் அருவருக்கத்தக்க ஏற்பாடுகளையும், 1972ல் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம். இத்தகைய கோழைத்தனங்களை தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை பெற்று வருகிறோம்?

அதிமுக தொண்டர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பற்றி அறியாத பாஜ கட்சி, சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து நம்மை சீண்டி வருகிறது. அந்த கட்சியும், அதன் நியமன தலைவர்களும் அதிமுகவின் அரசியல் ஆற்றலும், தொண்டர்கள் பலமும் என்ன என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ள, இந்த தேர்தலில் அவர்களுக்கும் சரியான பாடத்தை கற்பிக்கும் வண்ணம் ஜெயலலிதா காட்டிய பாதையில் தயங்காமல் செயல்படுங்கள். நாம் வம்பு சண்டைக்கு போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். ஆனால், நமது அமைதியும், சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே. அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நம்மை சீண்டிப் பார்க்கும் இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்துகொள்ளட்டும்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு `இரட்டை இலை’ சின்னத்திலும், கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர்களுக்கு `முரசு’ சின்னத்திலும் வாக்களிக்குமாறு, தீவிர தேர்தல் பிரசாரம் செய்திட வேண்டும்.

‘ஆஸ்பத்திரிக்கு அண்ணாமலை தான் போகணும்’
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ததாவது:
கமல்ஹாசனை அண்ணாமலை கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவின் தலைநகர் நாக்பூருக்கு மாற்றப்படும் என்று கமல் பேசினார். இதற்கு அர்த்தம், ஆர்எஸ்எஸ்சின் கட்டளைப்படி நடப்பது பாஜ, அக் கட்சி ஆட்சிக்கு வந்தால். ஆர்எஸ்எஸ் செயல்படும் நாக்பூரைத்தான் தலைநகர் ஆக்குவார்கள் என்பதே. இதைக்கேட்டு அண்ணாமலை ஆவேசமாகி உள்ளார். கமல்ஹாசனை மருத்துவமனைக்கு அனுப்பி அவருடைய மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். குளுகுளுவென இருந்த கோவையை இரண்டு டிகிரி வெப்ப நிலையை திராவிட அரசுகள் உயர்த்தி விட்டது என்று சொன்னவர் தான் நீங்கள். உங்களைத் தான் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் பாஜவின் பருப்பு வேகாது என பேசினார்.

The post வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை விடறதில்ல… பாஜவுக்கு எடப்பாடி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BAJA ,Secretary General ,Edappadi Palanisami ,MGR ,Jayalalitha ,Ademuga ,Riot ,Bajaj ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி