×

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பாஜ பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறது: ராகுல் காந்தி பேச்சு

மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அவர் வயநாடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் நேற்று ரோடு ஷோ நடத்தினார். இன்றும் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று காலை கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக- கேரள எல்லையான தாளூரில் உள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்திறங்கினார். தொடர்ந்து தாளூர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுடன் ‘செல்பி’ எடுத்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதைத்தொடந்து தாளூர் பகுதியில் உள்ள சர்ச் மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ராகுல்காந்தி பேசியதாவது: ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு மக்களுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் என்ற தவறான கொள்கையை வழி நடத்தி செல்கின்றனர். பல்வேறு கலாசாரம், மொழிகள் கொண்ட இந்தியாவில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற கருத்து எதிரானதாகும்.
தமிழ் மொழி, தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு மொழிகள், கலாசாரம் கொண்ட இந்தியாவில், பாஜ பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறது. இந்தியாவில் தமிழ், வங்காளம், குஜராத்தி, தென்நாடு மற்றும் வடநாடு என இருக்கும்போது, அதன் மொழி, கலாசாரங்களை பாதுகாப்பது இந்திய நாட்டு தலைவர்களின் முக்கிய கடமையாகும்.

பாஜ தேர்தல் அறிக்கையில், நிலவுக்கு ஒருவரை அனுப்புவதும், ஒலிம்பிக் போட்டி நடத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்களை குறிப்பிட்டுள்ளோம். பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவி தொகை, அங்கன்வாடி, ஆஷா தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ₹400 சம்பளம், படித்த இளைஞர்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி பெற ₹1 லட்சம், ராணுவம் உள்ளிட்டவைகளில் சீர்திருத்தம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மகளிர் உரிமைகளை காப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தை முடித்து கொண்டு ராகுல்காந்தி காரில் கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி புறப்பட்டு சென்றார்.

பாஜ தேர்தல் அறிக்கையில், நிலவுக்கு ஒருவரை அனுப்புவதும், ஒலிம்பிக் போட்டி நடத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்களை குறிப்பிட்டுள்ளோம்.

ராகுல் பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை
ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டர் தமிழக-கேரள எல்லையான தாளூரில் உள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்திறங்கியது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஹெலிகாப்டரை சோதனை செய்தனர். சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என்பதால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

The post பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பாஜ பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறது: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,Rahul Gandhi ,Former ,Congress ,President ,Lok Sabha elections ,Wayanad ,Kerala ,Mysore, Karnataka ,
× RELATED இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ராகுல் காந்தி