திருப்புவனம், ஏப்.16: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலராக இருந்தவர் வில்வமூர்த்தி. இவர் மீது கோயில் நிதியை முறைகேடாக மாற்றம் செய்தது தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்தாண்டு நவ.8ம் தேதி காணிக்கை உண்டியல் பணம், நகை உள்ளிட்டவற்றை எண்ணும் போது அன்றைய செயல் அலுவலர் வில்வமூர்த்தி இரண்டு தங்க கொலுசுகளை திருடினார்.
சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டு அவர் மீது போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் மடப்புரம் கோயில் நிதி நாற்பது லட்ச ரூபாயை ராமநாதபுரம் மாவட்டம் சண்டிலான் கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோயிலுக்கு மாற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் வில்வமூர்த்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தி முருகலிங்கம் என்பவரது பெயருக்கு மாற்றி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தணிக்கையின் போது கண்டறியப்பட்டது. தற்போதைய உதவி ஆணையர் ஞானசேகரன் திருப்புவனம் போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வில்வமூர்த்தி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் மீது நிதி முறைகேடு வழக்கு appeared first on Dinakaran.