×

கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும் நீர்நிலைகள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

 

கொடைக்கானல், ஏப். 16: கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள வருவாய் நிலங்கள் மற்றும் தனியார் தோட்டங்கள் வறண்டு மரங்கள், செடிகள், புல்வெளிகள் கருகி காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக மலைப்பகுதியிலுள்ள அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது.

குறிப்பாக பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை வறண்டு காணப்படுகின்றன. கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீர்நிலைகளின் அழகினை காண செல்லும் சுற்றுலா பயணிகள் வறண்டு கிடக்கும் நிலையை கண்டு ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

மேலும் இங்கிருந்து பாசனத்திற்கு செல்லும் தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. கொடைக்கானலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாரல் மழை பெய்தது. எனினும் வெயிலின் தாக்கம் மீண்டும் துவங்கியிருப்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

The post கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும் நீர்நிலைகள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்