×

நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க திட்டம் வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும்: அம்பாசமுத்திரத்தில் பிரதமர் மோடி பேச்சு

நெல்லை, ஏப்.16: ‘நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டம் வைத்துள்ளோம், வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும்’ என்று பிரதமர் மோடி பேசினார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பாஜ வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன், தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன், விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு கேட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பாஜ தேர்தல் அறிக்கையில், பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜ மிக கடுமையாக உழைத்து மக்கள் நல திட்டங்களை தந்துள்ளது. நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டம் வைத்துள்ளோம். தமிழ் மொழி, கலாசாரத்தை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜவை நேசிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் மொழிக்கு உலகமெங்கும் அங்கீகாரம் பெற்றுத் தருவோம். உலக சுற்றுலா வரைப்படத்தில் தமிழ்நாடு இடம் பெறும்.

உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்கிற கலாசார மையம் ஏற்படுத்தப்படும்.
தென் தமிழ்நாட்டில் இந்த பகுதியை பார்க்கும் போது வீரமும், தேசப்பற்றும் நிறைந்துள்ளது. மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் என துணிச்சல் மிக்கவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் அந்நியர்களை எதிர்த்து போராடியுள்ளனர். சுதந்திர போராட்ட களத்தில் முத்துராமலிங்க தேவர் தனது படைகளை சுபாஷ் சந்திர போஸிற்கு அனுப்பி வைத்தார். இந்தியா வளமான நாடாக வர வேண்டும். பாஜ தமிழ்மொழியை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களை நேசிக்கும் கட்சி ஆகும். இந்தியா தன்னிறைவு அடைய வஉசி செய்ததை நினைத்து பார்க்கிறேன். அவர் கப்பலோட்டி காட்டிய வழிகளால் இந்தியா பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது. காமராஜர் தேசபக்தியும், நேர்மையும் கொண்ட தலைவர்.

தமிழ்நாட்டிற்காக அயராது பணியாற்றியவர். அவரது வழியில் எங்களது லட்சியம் தூய்மையான அரசியல். இந்த கூட்டத்தில் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரு செய்தியை சொல்ல போகிறேன். இத்தனை முறை தமிழ்நாட்டிற்கு நான் வந்துள்ளேன். பாஜவுக்கும், எனக்கும் மிகப்பெரிய ஆதரவை மக்கள் தந்துள்ளனர். இதன் மூலம் புதிய இந்தியாவை படைக்க போகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பாஜ வேட்பாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடித்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 6.25 மணிக்கு வந்தார். பின்னர் மதுரை விமான நிலையத்தின் உள்பகுதியில் பிரதமர், பாஜ மதுரை வேட்பாளர் ராமசீனிவாசன், திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மாலை 6.50 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிரதமர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

The post நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க திட்டம் வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும்: அம்பாசமுத்திரத்தில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nellie ,Tamil Nadu ,Bharat ,PM Modi ,Ambasamudram ,Nellai ,Modi ,Agasthyarpatti ,Ambasamudram, Nellai district ,BJP ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...