குடியாத்தம், ஏப்.16: குடியாத்தம் நகரில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முக்கிய வீதிகளில் வியாபாரிகள் சார்பில் நிழற்பந்தல் அமைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. குறிப்பாக குடியாத்தம் நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 10 மணி முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வருவதை பெரும்பாலான மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், குடியாத்தம் அரசு மருத்துவமனை தெரு மற்றும் மருத்துவமனை பின்புறம் தெரு ஆகிய இடங்களில் ரெடிமேட் கடைகள், பழக்கடைகள், தனியார் மருத்துவ கிளினிக் ஆகியன உள்ளன. மேலும், குடியாத்தம் காய்கறி சந்தைக்கு செல்ல முக்கிய வழியாக இது உள்ளது. இதனால், இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் குடியாத்தம் நகர வியாபாரிகள் ஒருங்கிணைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை தெரு மற்றும் அரசு மருத்துவமனை பின்புற தெருக்களில் பச்சை நிறத்துடன் கூடிய நிழற்பந்தலை அமைத்துள்ளனர். இதனால், அந்த தெருக்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மேலும், அந்த நிழலில் செல்லும்போது மரத்தின் நிழலில் இருப்பதுபோல் உணரப்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள வியாபாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
The post வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில் நிழற்பந்தல் அமைப்பு குடியாத்தத்தில் வியாபாரிகள் ஏற்பாடு appeared first on Dinakaran.