×

போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற தம்பதி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

மீனம்பாக்கம்: போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்வதற்காக, கடந்த 11ம் தேதி இலங்கை ரத்தினபுரம், பாலங்கோடா பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (59) மற்றும் அவரது மனைவி, இலங்கை புட்டாலம் கதக்காடு பகுதியை சேர்ந்த ஷகிலா (56) ஆகியோர் வந்தனர். வழக்கமான நடைமுறைப்படி விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் தம்பதிகளின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என தெரியவந்தது. உடனே தம்பதியை பிடித்து வைத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரி ராஜசேகரன் புகார் அளித்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் இலங்கை தம்பதி மீது 7க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இலங்கை தம்பதிக்கு போலி பாஸ்போர்ட் யார் தயாரித்து கொடுத்தது, அதன் பின்னணி என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற தம்பதி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chennai ,Central Crime Branch ,Meenambakkam ,Chennai Anna International Airport ,Sri Lanka Rathinapuram ,Balangoda ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...