புதுடெல்லி: ஓய்வு பெற்ற நீதிபதிகள் 21 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ‘நீதித்துறையை பாதுகாக்க வேண்டும்’ என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில்,‘‘திட்டமிடப்பட்ட அழுத்தம், தவறான தகவல்கள் மற்றும் பொது அவமதிப்பு ஆகியவற்றின் மூலமாக நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகிறது. அரசியல் நலன் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக நீதித்துறை மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிக்கின்றனர்.
இது போன்ற செயல்கள் நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பது மட்டுமின்றி சட்டத்தின் பாதுகாவலர்களான நீதிபதிகளின் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற கொள்கைகளுக்கு நேரடி சவாலாக உள்ளது. இத்தகைய அழுத்தங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தலைமையிலான நீதித்துறை வலுப்படுத்தப்பட வேண்டும், சட்ட அமைப்பின் புனித தன்மை மற்றும் தன்னாட்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘ஓய்வுபெற்ற 21 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதமானது பிரதமர் மோடியின் திட்டமிட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். மோடிக்கு ஆதரவான 21 முன்னாள் நீதிபதிகளின் இந்த கடிதத்தையும், மோடிக்கு ஆதரவான 600 வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும். இவை அனைத்தும் சுதந்திரமான நீதித்துறையை மிரட்டவும், பயமுறுத்துவதற்கான முயற்சியாகும்.
நீதித்துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் காங்கிரஸ் கட்சியிடம் அல்ல பாஜவிடம் இருந்து தான் வருகின்றது. அது மோடியிடம் இருந்து வருகிறது. அமித்ஷாவிடம் இருந்து வருகிறது” என்றார். இந்த கடிதத்தில் முன்னாள் நீதிபதிகள் தீபக் வர்மா, கிருஷ்ண முராரி, தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர்.ஷா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி நீதிபதிகள் கடிதம் எழுதியது பிரதமரின் திட்டமிட்ட பிரசாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.