×
Saravana Stores

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்: இஸ்ரேலுக்கு உலக தலைவர்கள் வலியுறுத்தல்

வாஷிங்டன்: ஈரானின் டிரோன்,ஏவுகணைகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என இங்கிலாந்து,பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன. சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்கியதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இததற்கு பழிவாங்கும் வகையில் நள்ளிரவில் ஈரான் 300க்கும் அதிகமான டிரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது.

அதில்,99 சதவீத டிரோன்கள், ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.ஈரான் ஏவிய 300 டிரோன்களில் 80 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுக்கும் என்ற கருத்து நிலவுவதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில்,இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் கூறுகையில்,‘‘ ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை இங்கிலாந்து ஆதரிக்கவில்லை. இஸ்ரேல் புத்திசாலித்தனமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது’’ என்றார்.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,‘‘ஈரான் நடத்தியது மிக பயங்கரமான தாக்குதல் ஆகும். ஈரான் மீது தாக்குதலை நடத்தி எல்லை மீறி சென்று விடாமல் இருக்க இஸ்ரேலை பிரான்ஸ் வலியுறுத்தும்’’ என்றார்.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அனலீனா பேயர்போக்,‘‘ இதில், இஸ்ரேலுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியை ராஜதந்திர ரீதியாக பயன்படுத்தி பிராந்திய மோதல்கள் ஏற்படுவதை இஸ்ரேல் தடுக்க வேண்டும்’’ என்றார். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்,‘‘இரு நாடுகளும் அதிகபட்ச அமைதி காக்க வேண்டிய நேரம் இது’’ என்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் தொலைபேசியில் பேசி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிலைமை பற்றி அவருடன் விவாதித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,‘‘ கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதற்காக ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில்,99 சதவீத டிரோன்கள்,ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இலக்குகளின் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் மேற்கு ஆசியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிலான மோதல் உருவாகியிருக்கும். இந்த தாக்குதலுக்கு ஜி-7 நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்’’ என்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் யுத்த அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் எப்போது தாக்குதல் நடத்துவது என்பதில் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதையடுத்து அமைச்சரவை மீண்டும் கூடி இது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

The post ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்: இஸ்ரேலுக்கு உலக தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Iran ,Washington ,England ,France ,Israel ,Dinakaran ,
× RELATED ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்