மும்பை: பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட கடும் சரிவால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடியை இழந்தனர். இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 10ம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை தாண்டியது. இது பங்குச்சந்தை வரலாற்றில் பெரும் சாதனையாக கூறப்பட்டது. அதேநேரத்தில், இது செயற்கையான ஏற்றமாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
அடுத்த நாள் பங்குச்சந்தை விடுமுறை, 12ம் தேதி சென்செக்ஸ் 793 புள்ளிகள் சரிந்து 74,245 ஆனது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு பங்கு வர்த்தகம் நேற்று துங்கியது. துவக்கத்திலேயே 73,315.16 புள்ளிகளுடன் சரிவில் தான் வர்த்தகம் துவங்கியது. அதிகபட்சமாக 73,905.80 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 845 புள்ளிகள், அதாவது 1.14 சதவீதம் சரி்ந்து 73,399.78 புள்ளிகளில் முடிந்தது. இதனால், முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.5,18,953.97 கோடியை இழந்தனர்.
இதுபோல், 12ம் தேதி 793 புள்ளிகள் சரிந்ததில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2,52,301.16 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன்படி தொடர்ந்து 2 நாட்களில் 1,638 புள்ளிகள் சரிந்ததால் மொத்த இழப்பு ரூ.7,71,255.13 கோடி. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், சர்வதேச சந்தைகளில் ஸ்திரமற்ற சூழ்நிலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் குறித்த அச்சம் ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
The post பங்குச்சந்தையில் திடீர் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.