×

ரூ.2,069 கோடி மதிப்பிலான போதைபொருள் உட்பட ரூ.4,658 நாடு முழுவதும் கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் இதுவரை ரூ.4,658 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மாதம் 16ம் தேதி தேர்தல் ஆணையம் வௌியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனே தேர்தல் நடத்தை விதி முறைகள் நடைமுறைக்கு வந்தன. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள், மதுபானம் போன்றவற்றை விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு ஆகிய கண்காணிப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.  பிரசாரம் செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன், பொதுமக்களின் வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் இதுவரை ரூ.4,658 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது ரூ.3,475 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது 2024 மக்களவை தேர்தலையொட்டி கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நாள்தோறும் ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்படுகிறது.

19ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்க உள்ள நிலையில், இதுவரை ரூ.4,658 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், பரிசு பொருள்கள், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4,658 கோடியில், ரூ.395 கோடிக்கு மேல் ரொக்கப்பணம், ரூ.489 கோடிக்கு மேல் மதுபானம், மற்றும் ரூ.2,069 கோடி மதிப்பிலான(45%) போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் மிக அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூ.778.5 கோடி, அடுத்தபடியாக குஜராத்தில் ரூ. 605.3 கோடி, தமிழ்நாட்டில் ரூ.460.8 கோடி, மகாராஷ்டிராவில் ரூ.431.3 கோடி, பஞ்சாப்பில் ரூ.311.8 கோடி, டெல்லியில் ரூ.236 கோடி பணம், பரிசு பொருள்கள், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது சுதந்திர இந்தியாவில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 73 ஆண்டுகளில் இல்லாதது
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது ரூ.3,475 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆனால், இப்போது முதல் கட்ட தேர்தல் நடப்பதற்கு முன்பே ரூ.4,650 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பொதுத் தேர்தல் 1951-52ம் ஆண்டுகளில் நடந்தது. அது நடந்து 73 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் இந்த அளவுக்கு பணம், பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இல்லை.

* போதை பொருளில் குஜராத் டாப்
நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சுமார் ரூ.2069 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் இதில் மற்ற எல்லா மாநிலங்களையும் ஒப்பிடும்போது மிக அதிக அளவாக குஜராத்தில் ரூ.485 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

The post ரூ.2,069 கோடி மதிப்பிலான போதைபொருள் உட்பட ரூ.4,658 நாடு முழுவதும் கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,18th Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...