×

அவதூறான கருத்துக்களை பரப்பி நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்க முயற்சி: ஓய்வுபெற்ற 21 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று ஓய்வுபெற்ற 21 நீதிபதிகள் கொண்ட குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  இந்திய நீதித்துறையில் இருக்கும் நம்பிக்கை குறித்து தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி, எம்.ஆர்.ஷா மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உட்பட மொத்தம் 21 பேர் கொண்ட குழு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் மீது அவதூறான கருத்துக்களை சிலர் வெளியிடுகின்றனர். இதன்மூலம் நீதித்துறையின் செயல்முறைகளை கொச்சைப்படுத்தும் நயவஞ்சகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் நீதித்துறையின் புனிதத்தை அவமதிப்பது மட்டுமின்றி சட்டத்தின் பாதுகாவலர்களாக எப்போதும் இருப்போம் என நீதிபதிகள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு சவால்விடும் வகையில் உள்ளது. இவை நீதித்துறைக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுத்து அதன் மூலமாக தங்களுக்கு சாதகமான நீதிமன்ற முடிவுகளை பெற்றுக் கொள்ளும் உத்தியாகும். இதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கிறது. குறிப்பாக சமூக பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நீதிமன்றங்கள் கையாளும்போது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், இதுபோன்ற நடவடிக்கை சம்பந்தப்பட்ட குழுக்களின் மூலம் அதிகரிக்கிறது.

மேலும் நீதித்துறைக்கு எதிராக மக்களின் உணர்வுகளை தூண்டி விடப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் கருத்துகளுடன் ஒத்துப்போகும் போது நீதித்துறையின் முடிவுகளை பாராட்டுவதையும், எதிராக இருக்கும்போது கடுமையாக விமர்சிப்பது என்பது நீதித்துறையின் மறுஆய்வு செய்யும் முக்கிய அம்சத்தை மக்கள் குறைத்து மதிப்பீடுவதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. எனவே இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தாங்கள், முக்கிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அவதூறான கருத்துக்களை பரப்பி நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்க முயற்சி: ஓய்வுபெற்ற 21 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : justice department ,chief justice ,NEW DELHI ,Supreme Court ,D. Y. ,Chandrasuet ,Indian ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நீட் வினாத்தாள்...