டெல்லி : பிரதமர் மோடி ஆட்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் சீரழிக்கப்பட்டுவிட்டது. மோடி ஆட்சிக்கு முன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு சிறந்து விளங்கியது. மோடி பிரதமராவதற்கு முன் சிறு, குறு தொழில்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. பணமதிப்பு ரத்து, ஜிஎஸ்டி, திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்கள் சிதைந்தன.
தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் மையமாக திகழும் கோவையில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பாதிப்பை சுட்டிக்காட்டினார். மோடி அரசின் மோசமான நிர்வாகத்தின் காரணமாக கொங்கு வட்டாரத்தில் இன்னும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. மோடி என்ற தனி மனிதர் ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு என்ற பேரழிவால் பொருளாதார நடவடிக்கையே முடங்கிப் போய்விட்டது. தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களால் ஊதியம் வழங்க முடியாத நிலையால் பொருள் நுகர்வும் முடங்கிப் போனது. நடைமுறை மூலதனத்தை நம்பியே செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 1,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் சாயப் பட்டறைகள் மூடப்பட்டன. திருப்பூர் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் ரூ.4,000 கோடி சரிவைச் சந்தித்தது. அவசர கதியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடுத்த பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. ஒன்றிய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரியால் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலைக்கு சிறு, குறு நடுத்தர தொழில்கள் முடங்கி உள்ளன.
மூன்றாவதாக முறையான திட்டமில்லாமல் அமல்படுத்திய கொரோனா ஊரடங்கால் சிறு, குறு, நாடுத்தர தொழில்கள் பேரழிவை சந்தித்தன. சில குறிப்பிட்ட தொழிலதிபர்களை மட்டுமே மோடி ஆட்சி ஆதரித்ததால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் புறக்கணிக்கப்பட்டன. நாட்டின் ஒரு சில பெரும் தொழில் நிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்தது. பெரும் நிறுவனங்களின் கடனை ரத்து செய்த மோடி அரசு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் காட்டவில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு.. மும்முனை தாக்குதலால் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்கள் சிதைந்தன : காங்கிரஸ் தாக்கு!! appeared first on Dinakaran.