மும்பை : முகேஷ் அம்பானி மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு வந்த விமானங்களை இந்திய விமானப்படையினர் கையாண்டதும் அங்கு தேவையான வசதிகளை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்றது. இதில் பில் கேட்ஸ், மார்க் ஸுக்கர்பர்க் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சர்வதேச அளவில் விருந்தினர்கள் அழைக்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஒரு குடும்ப நிகழ்விற்காக இந்த நடவடிக்கையை எடுத்தது சர்ச்சையான நிலையில், அந்த நிகழ்விற்கு வந்த விமானங்களை இந்திய விமானப்படையினர் கையாண்டது தெரியவந்துள்ளது. பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை 24 மணி நேரமும் விமானப் போக்குவரத்தை கண்காணிக்க விமானப்படையின் உதவி வேண்டும் என பாதுகாப்புத் துறையிடம் ரிலையன்ஸ் குழுமம் கோரியதாக தெரிகிறது. இதனையடுத்து பாதுகாப்புத் துறையின் பரிந்துரையின்படி, விமானப்படையினர் கண்காணித்துள்ளனர்.
30- 40 விமானங்கள் வந்து செல்லும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், 5 நாட்களில் 600 விமானங்கள் வந்து சென்றுள்ளன. அந்த விமான நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதால் அம்பானி வீட்டு திருமண நிகழ்விற்காக கடைசி நிமிடத்தில் சாலை அமைப்பது, டாக்சிக்கான வழி அமைப்பது, பெரிய விமானங்கள் தங்கு தடையின்றி இறங்குவதற்காக ஓடுபாதையினை விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் குழுமத்தினர் இந்த பணிகளை மேற்கொள்ள ஆட்களை அனுப்பியும் இருந்தாலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இந்திய விமானப்படையினரே அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜாம்நகரில் விமானப் போக்குவரத்து தடையின்றி தொடர்வதற்காக சர்வதேச விமான போக்குவரத்திற்கு நாட்டிலேயே முக்கிய விமான நிலையமாக இருக்கும் மும்பை விமான நிலையம் சுமார் 4 மணி நேரம் மூடப்பட்டதும் தெரியவந்துள்ளது.
The post முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக்காக பணியாற்றிய இந்திய விமானப்படையினர் :சாலை அமைத்து, ஓடுதளத்தை விரிவுப்படுத்தி கொடுத்ததாக தகவல் appeared first on Dinakaran.