சென்னை: அண்ணாமலை மீதான விதிமீறல் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் வாகன பிரச்சாரம், மைக் பிரச்சாரம் உள்ளிட்ட எந்த வகையிலும் வாக்காளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்ற விதி உள்ளது. இதனிடையே, கோவை தொகுதிக்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து 4-வது நாளாக தேர்தல் விதியை மீறியும், அனுமதி பெறாமல் நூதன முறையிலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அண்ணாமலை வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தொண்டர்களுடன் சாலையில் நடக்க தொடங்கினார். அண்ணாமலையின் இத்தகைய செயலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, அண்ணாமலை உள்பட 300 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சூலூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை மீதான விதிமீறல் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதி அளித்தார். இரவு 10 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post அண்ணாமலை மீதான விதிமீறல் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு உறுதி appeared first on Dinakaran.