கோவை: கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்பட 300 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இவர் வேற்று இரவு காமாட்சிபுரத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு திருச்சி சாலைக்கு வந்த போது இரவு 10 மணியை கடந்திருந்தது. அப்போது பிரச்சாரத்துக்காக நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என்ற விதியை மீறி அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் கையசைத்தவாறு பயணித்தார். தேர்தல் விதியை மீறியும் அனுமதி பெறாமல் நூதன முறையிலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அண்ணாமலை வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தை தொடர்ந்தது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அண்ணாமலை கட்சியினருடன் நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி களைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் தொண்டர்களுடன் சாலையில் அண்ணாமலை நடக்க தொடங்கினார். அண்ணாமலையின் இந்த செயலால் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மருத்துவமனைக்கு செல்ல முயன்ற 3 அவசர ஊர்திகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அண்ணாமலை உள்பட 300 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சூலூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.