மதுரை, ஏப். 15: மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் மீனாட்சியம்மனின் வீதியுலாவில் இருந்த கூட்டத்தில் ,தங்க செயின் திருடிய நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை, கீழ ஆவணி மூலவீதி, அம்மன் சன்னதி சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன் வீதியுலா நிகழ்வை காண பக்தர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, கூட்டத்தில் பெண்களை நோட்டமிட்டபடி நின்றிருந்த நான்கு பெண்கள் மீது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஜெகநாதன் என்பவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பெண் போலீசார் உதவியுடன் அந்த பெண்களிடம் சோதனை நடத்தியதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த 6 பவுன் தங்க செயின் சிக்கியது. இதையடுத்து அந்த பெண்கள் விளக்குத்தூண் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி (65), சுகுணா (45), ராஜாமணி (65), உமா (57) எனவும், திருவிழா கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் செயின் பறித்ததும், மீண்டும் செயின் பறிப்பதற்காகநகை பறிக்க காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தங்க செயினை பறிகொடுத்த பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post மதுரையில் மீனாட்சியம்மன் வீதியுலாவின் போது பக்தர்கள் கூட்டத்தில் செயின் பறித்த 4 பெண்கள் கைது appeared first on Dinakaran.