புதுக்கோட்டை, ஏப்.15: வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாத நிலை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி தமிழ் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், மாத்தூர், மண்டையூர், புதுக்கோட்டையின் முறநகர் பகுதியில் உள்ள கிராமங்கள், ஆலங்குடி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது உழவு பணிக்கு பெரும்பாலும் டிராக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும் கிராம பகுதிகளில் பழமை மாறாமல் உழவு மாடுகளில் ஏர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் ஒரு பொதுவான இடத்தில் ஊர்கூடி நல்லேறு பூட்டும் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். ஆனால் நவீன கருவிகளின் பயன்பாடு விவசாயத்தில் அதிகரித்து விட்ட பின்பு தங்கள் நிலங்களிலேயே விவசாயிகள் நல்லேறு பூட்டும் நிகழ்வை நடத்துகின்றனர்.
முன்னதாக வயலில் ஏர்கலப்பை, நிரைசெம்பு தண்ணீர் போன்றவற்றை வைத்து அரிசி படையல் செய்து பூமாதேவியை வணங்கினர். திருவரங்குளம் அருகே உள்ள வல்லத்திராக்கோட்டையில் விவசாயிகள் நேற்று நல்லேர் பூட்டி வழிபட்டனர். கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்பட பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் சித்திரை முதல் நாளில் தங்கள் வயல்களில் பூ, பழம், விதைகள் வைத்து படையலிட்டு விளைநிலத்திற்கும், ஏர் இழுக்கும் மாடுகளுக்கு தீபம் காட்டி முதல் ஏர் பூட்டி உழுதனர். மேலும் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய உபகரணங்களையும் வைத்து வழிபட்டு பெண்கள் கும்மியடித்து குலவையிட்டு எந்த ஒரு இயற்கை பேரிடரிலும் விவசாயிகள் மற்றும் விவசாயமும் பாதிக்கக்கூடாது, நாடு செழிக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் விவசாயத்தை நம்பி தான் உள்ளது. இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, எள், சோளம், உளுந்து, துவரை போன்ற தானியங்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.பண்டைகாலம் முதல் சித்திரை மாதத்தில் பொன் ஏர், நல்ஏர் என்று கூறும் விதமாக சித்திரை மாதத்தில் இயற்கை எரு போட்டு, மாடு கட்டி ஏர் ஓட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. தற்சமயம் ஏர் மாடுகள் இல்லாததால் பொன் ஏர் கட்டுவதற்கு முன்பாக சித்திரை வருடபிறப்புக்கு விவசாயிகள் பெரும்பாலானோர் தேங்காய், பழம், இயற்கை தொழு உரம், நெல், கடலை விதை, காப்பு அரிசி என்றும் சக்கரை கலந்த பச்சரிசி எடுத்து சென்று அவரவர் நிலங்களில் தலைவாழை இலை விரித்து பச்சை அரிசி வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து தொழுஉரம் தூவி, விதை விதைத்து இறைவழிபாடு செய்தனர். விவசாயிகள் கூறும் போது பங்குனி பழ மழை பெய்து உள்ளதால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறோம் என்று கூறினார்கள்.
The post புதுக்கோட்டை, ஆலங்குடி கிராமங்களில் சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி வழிபாடு appeared first on Dinakaran.