- காங்
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராபர்ட் புரூஸ்
- நெல்லை
- சட்டமன்ற உறுப்பினர்
- ரூபி மனோகரன்
- காங்கிரஸ்
- நெல்லை மக்களவை
- இந்தியா கூட்டணி
- தின மலர்
நெல்லை, ஏப்.15: வெள்ளத்தின் போது தமிழ்நாட்டிற்கு வராத மோடி, தேர்தலுக்காக மட்டும் வருகிறார் என்று நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பேசினார்.
இந்தியா கூட்டணியின் நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் பாளை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அம்பேத்கர் பிறந்த தினமான நேற்று நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடர்ந்தார்.
வேட்பாளர் ராபர்ட் புரூஸ் உடன் பாளையஞ்செட்டிகுளத்தில் பிரசாரத்தின்போது ரூபி மனோகரன் எம்எல்ஏ பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசி வந்திருக்கிறார். பாஜவினருக்கு எப்போதும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் கிடையாது. அவர்களுக்கு தெரிந்தது மத அரசியல் மட்டுமே. அதை வைத்து வடமாநில மக்களை ஏமாற்றலாம். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. காமராஜர் கொண்டு வந்த கல்வியினால் நம் தமிழக மக்கள் நன்றாக படித்து முன்னேறியுள்ளோம்.
கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தது. டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு, பலர் வீடுகளையும், கால்நடைகளையும் இழந்தனர். அப்போதெல்லாம் மோடி தமிழ்நாட்டை எட்டிக்கூட பார்க்கவில்லை. நிவாரணத்தொகையாக ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. ஆனால் கடந்த 2 மாதத்தில் மட்டும் பிரசாரத்திற்காக 7 முறை தமிழகம் வந்துள்ளார். இப்போது மீண்டும் இன்று அம்பாசமுத்திரம் வருகிறார். அவருக்கு மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை இல்லை. அவர் எத்தனைமுறை வந்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது.
ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் ஏழைக்குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு மகாலெட்சுமி திட்டத்தின் மூலமாக அவர்கள் வாழ்க்கை மேம்பட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். எனவே இந்தியா கூட்டணியின் நெல்லை மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் புரூஸை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய அனைவரும் கை சின்னத்தில் வாக்களியுங்கள்”. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் மாநில, மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரசார், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
The post காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரசாரம் வெள்ளத்தின் போது வராத மோடி தேர்தலுக்காக தமிழ்நாடு வருகிறார் appeared first on Dinakaran.