×

மாவட்டத்தில் 100 சதவீத பூத் சிலிப் விநியோகம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 1489 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்யும் வாக்காளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 732 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகம் பேர் போட்டியிடுவதால், ஒரு வாக்குச்சாவடிக்கு 2 பேலட் யூனிட் பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1784, கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியப்படுத்தும் 1934 விவி பாட் இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூரில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் முன்னிலையில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப்(வாக்குச்சாவடி சீட்டு) வழங்கும் பணி தொடங்கி நடைபெற்ற வந்தது.

தர்மபுரி ராஜாபேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தி பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் 1489 பேர் பூத் சிலிப் வழங்கி வந்தனர். நேற்று வரை வீடுகளில் இருந்த 100 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது.
வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்யும் வாக்காளர்களுக்கு மட்டும் விடுபட்டுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலக பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வீடு வீடாக பூத் சிலிப்(வாக்குச்சாவடி சீட்டு) வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. கடந்த 1ம் தேதி முதல் இன்று(நேற்று 14ம் தேதி) வரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் 100 சதவீதம் பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. இப்பணியில் 1489 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். வீடுகளில் ஆட்கள் இல்லாமல், வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் நபர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தற்போது உயிருடன் இல்லாதவர்களுக்கான பூத் சிலிப்பும் இருப்பு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 12 அடையாள ஆவணங்களில், ஏதாவது ஒன்றினை காண்பித்து வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்காளிக்கலாம்,’ என்றனர்.

The post மாவட்டத்தில் 100 சதவீத பூத் சிலிப் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Booth Silip ,Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை